
நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேணச் சிறந்த நூல்கள் தேவை
என்பதை உணர்ந்து, அறிஞர்களின் சிறந்த பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியிலும்
இறங்கி உள்ளேன். உலகெங்கும் வாழும் தமிழர் படித்து முன்னேறவும் தமிழரல்லாத ஏனையோரும்
தமிழைக் கற்பதற்கு உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர மின்நூல் களஞ்சியங்களையும்
பேணுகிறேன். இவ்விரு பணிகளையும் இவ்வலைப்பூ ஊடாக வெளிக்கொணரவுள்ளேன்.
யாழ்பாவாணன்
தன்(சுய)நலவாதியா? எல்லோரும் இப்படித்தான் என்னைக் கேட்பார்கள். நானும் பொது நலன் கருதி
இம் மின்நூல் களஞ்சியத்தைத் தொடங்கவில்லை. நான் பாவிக்கும் நூல்களை; நூல்களே கிடையாத
அல்லது நூல்களைத் தேடிப்பெற வசதியற்ற இடத்தவர் பாவிக்க இடமளித்தால் நல்லது என எண்ணினேன்.
இவற்றைப் பகிர்வதால் பலருக்கு நன்மை கிட்டுமென உணர்ந்தேன். இதனைப் போய் பொது நலன் என்று
சொல்லமுடியாது.
நானும் எனது
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பொத்தகங்களையே இணைய வழியில் பொறுக்கித் திரட்டினேன்.
தமிழைப் பேண, இலக்கியங்களை அறிய, தமிழைரைப் படிக்க, இலக்கியங்களை ஆக்க, ஊடகங்களில்
இட, ஊடகங்களைப் படிக்க, உளவியலைப் படிக்க, உளநல வழிகாட்டலைப் புரிய, மருத்துவர்களின்
வழிகாட்டலைப் பெற, தன்(சுய) முன்னேற்ற நூல்களை வாசிக்க, பாலியலையும் வாழ்வியலையும்
விளங்கிக்கொள்ள, கோட்பாடுகளை (தத்துவங்களை) அறிய, கணினி சார்ந்த நூல்களைப் படிக்க எனப்
பல நோக்கோடு பல நூல்களை நான் விரும்பியவாறு பொறுக்கித் திரட்டினேன்.
அதனையே இம்
மின்நூல் களஞ்சியத்தில் நான் விரும்பியவாறு தனித் தனித் தலைப்பிட்டுத் தொகுத்துள்ளேன்.
இவற்றைப் பல நாடுகளிலும் உள்ள நம்மாளுகளுக்குப் பயன் தரும் வகையில் பகிர்ந்துகொள்ளவே
இம்மின்நூல் களஞ்சிய முயற்சி என்பேன். இது எனது தன்(சுய)நலத் தேவைகளை நிறைவு செய்து
தந்தாலும் பலருக்குப் பயன்படுமாயின் அல்லது இதனால் பலர் நன்மை அடைவார்களாயின் அதுவே
எனக்கு நிறைவைத் தரும்.
இந்நூல்களாற்
பயனென்ன?
உலகெங்கும்
நூற்றியம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் போர்
மற்றும் தொழில் வாய்ப்புத் தேடி புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் பலர் தமிழை
மறந்து விட்டனர். ஆங்கில மொழிமூலம் தமிழைக் கற்பதற்கான நூல்களை இங்கு வைத்துள்ளேன்.
அவற்றைத் தமிழரல்லாத ஏனையோரும் படித்துத் தமிழில் புலமை பெறலாம்.
மேலும் தமிழ்
பேணுவோருக்கும் தமிழ் இலக்கிய விரும்பிகளுக்கும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும்
உளவியல், இதழியல், கணினியியல் துறை சார்ந்தோருக்கும் உளநல மதியுரைஞர்களுக்கும் வாழ்வியல்
தேடல்களுக்கும் மூதறிஞர் வழிகாட்டல்களுக்கும் என விரும்பியோர் பயன்படுத்தலாம்.
பயனர் விருப்பங்களை
இவை நிறைவு செய்யுமா?
தொடக்கத்தில்
சில நூறு நூல்களையே இணைத்திருந்தேன். அதனைக் கூட நாளுக்கு நாள் பதிவிறக்கி இருந்தனர்.
இனிவரும் காலங்களில் இவை ஆயிரங்களையும் தாண்டலாம் என்றிருந்தேன். ஆயினும், ஆயிரங்கள்
போதாதென நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப்
பேண முயற்சி எடுத்து வருகின்றேன்.
எனது கற்றலும்
தேடலும் தொடரும் வரை இணைய வழியாக நூல்களைத் திரட்டிக்கொண்டே இருப்பேன். அதனை இம் மின்நூல்
களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டே இருப்பேன். ஆயினும், இவை பயனர் விருப்பங்களை நிறைவு
செய்யும் என்பது ஐயமே! எப்படி இருப்பினும் எனது தேடல்களுக்கு ஒத்த உள்ளங்களுக்கு நிறைவைத்
தரும் என்பதில் நம்பிக்கை உண்டு. ஆயினும், எல்லோரது விருப்பங்களையும் நிறைவு செய்யும்
வகையில் நல்ல நல்ல மின்நூல்களைத் திரட்டிப் பேண முயற்சி எடுப்பேன் என்பதை உறுதியாகக்
கூற விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.